தெனாலிராமன் - 2
காளிமகாதேவியின் அருள் கிடைத்தல்
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்தது. ஆறு, ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்து வணங்கி ஆசிப்பெற்றனர்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து
"தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" வினவினார்.
அதற்கு தெனாலி ராமன் "மழை பெய்வதும், பெய்யாமல் போவதும், இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன், தங்கள் மகிமையால் தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது, ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். அப்போது பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதைப்பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலதான் இந்த ஊர் மக்கள் செயல் இருந்ததால் சிரித்தேன்" என்றாராம் தெனாலிராமன்.
இதைக்கேட்ட கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து "தம்பி, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப்பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார்.
இதைக்கேட்ட தெனாலிராமன், காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தார். காளியின் திருஉருவத்தைக்காண பலவாறு வேண்டி தவம் இருந்தார். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினாள். அவளது உருவத்தைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக பலமாக சிரித்தார்.
அவர் சிரிப்பதை பார்த்த காளி "என் உருவத்தை பார்த்து எல்லாரும் அஞ்சுவார்கள். நீயோ ஏன் சிரிக்கிறாய்?" என்று வினவினாள்.
அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. உனக்கோ ஆயிரம் தலை உள்ளது, ஆனால் இரண்டு கைகளே உள்ளது. உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன், அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றார்.
இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்துவிட்டாள். பின்னர் "மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுதிகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள்